தஞ்சை அருகே குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணிக்கான பூஜை


தஞ்சை அருகே குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணிக்கான பூஜை
x
தினத்தந்தி 8 Dec 2019 10:45 PM GMT (Updated: 8 Dec 2019 7:11 PM GMT)

தஞ்சை அருகே குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணிக்கான பூஜையில் அதிகாரிகள்-விவசாயிகள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் பகுதியில் அமைந்து உள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. அரசுக்கு சொந்தமான இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அரவை தொடங்கப்படும். அதன்பிறகு சில ஆண்டுகள் நவம்பர் மாதத்திலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அரவை பணி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு முன்கூட்டியே அரவையை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரவை கடந்த மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இந்த மாதம் 8-ந் தேதி தொடங்கப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

பூஜை

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு, லாரிகளில் கரும்புகளை ஏற்றி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். அந்த கரும்புகளுடன் சர்க்கரை ஆலை வளாகத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதிக்குள் அரவை பணி தொடங்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் 2019-20-ம் ஆண்டுக்கான அரவை பணிக்கான பூஜை குருங் குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை வளாகத்தில் நேற்றுகாலை நடந்தது. பூஜையை ஆலையின் தலைமை நிர்வாகி மங்களம் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிலுவைத் தொகை

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறும்போது, அரவை பணி நாளை(இன்று) மாலை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். சர்க்கரை விலையை உயர்த்த வேண்டும். சென்ற ஆண்டு அரவை மூலம் கிடைத்த சர்க்கரை குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்க்கரையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கடந்த 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டுகளில் அரவைக்காக அனுப்பப்பட்ட கரும்புக்கு ரூ.30 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளது. அந்த தொகையை இந்த ஆண்டு வழங்க வேண்டும் என்றார்.

Next Story