கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை அமோகம்


கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 8 Dec 2019 9:45 PM GMT (Updated: 2019-12-09T01:47:42+05:30)

கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர், சிதம்பரத்தில் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கடலூர், 

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகள், கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகம் முழுவதும் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

இதில் தேங்காய், மாம்பழம், தாமரை, துளசி மாடம், இலை வடிவம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு குறைந்தபட்சமாக 40 பைசா முதல் அதிகபட்சமாக 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கடலூர் மாவட்டத்திற்கு வந்து அகல் விளக்குகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகை தீப விழா நாளை நடைபெற உள்ளதையொட்டி தற்போது அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கடலூரில் அகல் விளக்குகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், நான் விருத்தாசலம் பகுதியில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறேன். தற்போது விற்பனை அமோகமாக உள்ளது. என்னிடம் தேங்காய், மாம்பழம், தாமரை, துளசி மாடம், இலை வடிவம், ஸ்டார் வடிவம், விநாயகர் கைகளில் ஏந்திய அகல் வடிவம், மூன்று முகம், நான்முகம், ஐந்துமுகம், பண்முகம் என பல்வேறு வடிவங்களில், பல அளவுகளில் தேவைக்கு ஏற்ப அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளது என்றார். 

Next Story