ஒருவாரத்திற்கு பிறகு நீர்வரத்து குறைந்தது: சுருளி அருவியில் குளிக்க அனுமதி
சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து, ஒருவாரத்திற்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானதும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி உள்ளது. இதன் காரணமாக இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 30-ந்தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதில் சிலர் அருவியின் ஆற்று பகுதியில் குளித்துவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் மழை குறைந்ததால் ஒருவாரத்திற்கு பிறகு சுருளி அருவியில் நீர்வரத்து சீரானது. இதையடுத்து சுருளி அருவியில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று சுருளி அருவிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை நடைபெற்று வருவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவிக்கு சென்று குளித்துவிட்டு செல்கின்றனர். இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், அருவி பகுதியில் தினந்தோறும் துப்புரவு பணி மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட வேண்டும், மேலும் அருவியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story