சேலத்தில் பிரபல திருடன் கைது: ரூ.5 லட்சம் பொருட்கள் மீட்பு
சேலத்தில் கைதான பிரபல திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும் முருகன் சிலையை ஆய்வுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் சூரமங்கலம், பள்ளப்பட்டி, இரும்பாலை ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளில் கடந்த 2 மாதமாக வீடு புகுந்து திருடுதல், இருசக்கர வாகனங்களை திருடுதல் ஆகிய குற்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் செந்தில் தலைமையில் உதவி போலீஸ் கமிஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது.
இந்தநிலையில் ஓமலூர் அருகே பாகல்பட்டி செல்லப்பிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்த சப்பாணி என்கிற அய்யந்துரை (வயது 48) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் செந்தில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:-
அய்யந்துரை கடந்த 1990-ம் ஆண்டு முதல் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளான். இரும்பாலை, பள்ளப்பட்டி, ஓமலூர், சூரமங்கலம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளான். இதேபோல் இரும்பாலை ராசி நகரில் ஒரு முருகன் சிலை, ஜாகீர்அம்மாபாளையம் பாரதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், அரியாக்கவுண்டம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரெட்டிப்பட்டியில் வீட்டிற்குள் நுழைந்து 2 செல்போன்கள், சேலம் ரெயில் நிலையம் எதிரே வீட்டிற்குள் நுழைந்து ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடியுள்ளான்.
பழைய சூரமங்கலம் பகுதியில் முருகன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 3 பவுன் நகையை பறித்து சென்றுள்ளான். இந்த சம்பவங்களை சிறையில் இருந்து வெளியில் வந்த 40 நாட்களுக்குள் செய்துள்ளான். அவனிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், 10 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. அவனிடம் இருந்து முருகன் சிலையும் மீட்கப்பட்டது. இவன் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சரித்திரபதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் கோவை சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்.
மேலும் பிரபல திருடன் அய்யந்துரையிடம் இருந்து மீட்கப்பட்ட முருகன் சிலை குறித்து போலீசார் கூறுகையில், முருகன் சிலை வெண்கல சிலையா? அல்லது பழமை வாய்ந்த சிலையா? என்பது குறித்து தெரியவில்லை. இதனால் சிலை சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு கிடைக்கும் முடிவின் அடிப்படையில் எந்த மாதிரியான சிலை என்பது தெரியவரும். அப்போது தான் சிலையின் மதிப்பு தெரியவரும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story