தூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து


தூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 Dec 2019 3:45 AM IST (Updated: 9 Dec 2019 7:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அண்ணன்–தம்பியை கத்தியால் குத்திய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

தூத்துக்குடி, 

தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பீட்டர் மகன்கள் ஜோசப் (வயது 52), சகாயராஜ் (45). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பூபால்ராயர்புரம் சாலமன் தெருவில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் என்பவர் கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களிடம் தகராறு செய்தார்.

இதனை ஜோசப் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜோசப்பை குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகாயராஜ் தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் விஜய் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story