உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, முதல் நாளில் 59 பேர் மனு தாக்கல்
தேனி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேனி,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி, 130 கிராம ஊராட்களில் உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
முதல்கட்டமாக ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 33 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 48 ஊராட்சி மன்ற தலைவர்கள், 417 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 501 பதவிகளுக்கு நேர்முக தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்காக 285 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
2-வது கட்டமாக பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடங்கிய 7 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 65 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 82 ஊராட்சி மன்ற தலைவர்கள், 740 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 898 பதவிகளுக்கு 30-ந்தேதி நேர்முக தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்தது. அந்த வகையில் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 130 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் பெறும் பணி நேற்று தொடங்கியது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன. முதல் நாளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 54 பேரும் என மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 2 பேரும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 3 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 4 பேர், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 20 பேர், பெரியகுளம் ஒன்றியத்தில் 7 பேர், தேனி ஒன்றியத்தில் 7 பேர், போடி ஒன்றியத்தில் 4 பேர், சின்னமனூர் ஒன்றியத்தில் 9 பேர், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கம்பம் ஒன்றியத்தில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் இல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வேட்பு மனுக்கள் பெறும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பு மனு தாக்கல் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story