சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வேகமாக நிரம்பிய அணை, முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நிரம்பி வெளியேறும் தண்ணீர் வரட்டாறு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது.
இந்த அணையின் மூலம் ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, புத்தம்பட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி, அவற்றின் மூலம் 1,640 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை சண்முகாநதி அணையில் இருந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்துவிட்டார். அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கன அடி வீதம் 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராயப்பன்பட்டி விவசாயிகள் ஆனைமலையன்பட்டியில் உள்ள கண்மாயை நிரப்ப வேண்டும் என்றும், இதேபோல் முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story