கோவில் கட்டி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கோவில் கட்டி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Dec 2019 4:00 AM IST (Updated: 9 Dec 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கோவில் கட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெருமாள் கோவில் கட்டுவதற்காக சுமார் 300-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்தை வசூல் செய்து சிலரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் கோவில் கட்டாமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஊர் பொது கூட்டம் கூட்டி பணம் பெற்ற அவர்களிடம் கேட்டபோது, கோவில் கட்ட முடியாது என்றும், பெற்றுக்கொண்ட பணத்தை பொதுமக்களிடம் மீண்டும் திருப்பி தருவதாக கூறியதாக தெரிகிறது.

ஆனால் 1 ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடம்பத்தூர் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங் களை எழுப்பியதால்பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story