தினமும் ஒரு அங்குலம் பூமிக்குள் இறங்கும், சோலூர்மட்டம்-கரிக்கையூர் சாலையை மண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆய்வு


தினமும் ஒரு அங்குலம் பூமிக்குள் இறங்கும், சோலூர்மட்டம்-கரிக்கையூர் சாலையை மண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 2019-12-09T23:23:22+05:30)

தினமும் ஒரு அங்குலம் பூமிக்குள் இறங்கும் சோலூர்மட்டம்-கரிக்கையூர் சாலையை மண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆய்வு செய்தார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர் மட்டத்தில் இருந்து கரிக்கையூர் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மெட்டுக்கல் என்னும் பகுதியில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக விரிசல்கள் ஏற்பட்டது. இந்த சாலையின் ஒரு பகுதி சுமார் 3 அடி அளவிற்கு உள்வாங்கியது. இதனால் அந்த சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த சாலை தினமும் 1 அங்குலம் வீதம் மீண்டும் இறங்கி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியை சுற்றியுள்ள தேயிலைத்தோட்டங்கள் உள்பட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் உள்வாங்கியிருப்பதும், அங்கிருந்த மரங்கள் வேருடன் சரிந்து விழுந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சாந்திராமு எம்.எல்.ஏ., மற்றும் சேலத்தை சேர்ந்த புவியியல் துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விரிசல்கள் விழுந்து, சாலை பூமிக்குள் இறங்கியதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட புவியியல் துறை மற்றும் மண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

கலெக்டரின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட மண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குனர் ரமே‌‌ஷ் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று மெட்டுக்கல் கிராமத்திற்கு சென்று அங்கு சாலை பூமிக்குள் இறங்கிய இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் தேயிலை தோட்டம், மற்றும் மலைப்பகுதி ஆகியவற்றில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும் அப்பகுதி மக்களிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வு குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலை பூமிக்குள் இறங்கிய பகுதிகளில் பொதுமக்கள் மண்ணை கொட்டி நிரப்பி வாகனங்கள் செல்லும் வகையில் அமைத்திருந்தனர். இதனை கண்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள சாலையில் வாகனங்களை இயக்குவது ஆபத்து எனவே இந்த சாலையில் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

குறைந்த காலத்தில் அதிகளவு மழை பெய்த காரணத்தால், சாலை போதிய வலுவின்றி இருந்த காரணத்தால் பூமிக்குள் இறங்கி இருக்கலாம். அல்லது நிலத்திற்கு கீழே செல்லும் நீரோடை காரணமாக நிலத்தில் உள்ள மண்ணின் இறுக்கம் குறைந்து மண் இளகி நிலத்தில் விரிசல்கள் விட்டு இறங்கி இருக்கலாம்.

எனினும் நிலத்தில் விரிசல்கள் விட்டு, பூமிக்குள் இறங்கியதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊட்டியில் இருந்து புவியியல் துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர். அவர்களது அறிக்கையும் வந்த பிறகு மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை செய்து, அப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story