பெங்களூருவில் மனைவி, கொழுந்தியாள் மீது திராவகம் வீச்சு - போலீசுக்கு பயந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை


பெங்களூருவில் மனைவி, கொழுந்தியாள் மீது திராவகம் வீச்சு - போலீசுக்கு பயந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2019 10:00 PM GMT (Updated: 9 Dec 2019 7:48 PM GMT)

பெங்களூருவில் குடும்ப பிரச்சினையால் மனைவி, கொழுந்தியாள் மீது திராவகம் வீசிய, கம்ப்யூட்டர் என்ஜினீயர் போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுவர்ணா லே-அவுட்டில் வசித்து வந்தவர் சரத்குமார் (வயது 28). இவரது மனைவி ஸ்வேதா (25). இந்த தம்பதிக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான சரத்குமார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஸ்வேதாவும் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்கிறார். திருமணத்திற்கு பின்பு ஸ்வேதாவின் வீட்டிலேயே சரத்குமார் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியுடன், அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சரத்குமார் குடியேறினார்.

இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சரத்குமாருடன் வாழ பிடிக்காமல் கடந்த செப்டம்பர் மாதம், சுவர்ணா லே-அவுட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஸ்வேதா சென்றுவிட்டார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ஸ்வேதாவை சரத்குமார் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அவர் சரத்குமாருடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஸ்வேதாவும், அவரது சகோதரி அனுஷா(23) ஆகிய 2 பேரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது வீட்டுக்கு வந்த சரத்குமார், மனைவி ஸ்வேதாவுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து ஸ்வேதா மீதும், இதனை தடுக்க வந்த அனுஷா மீதும் சரத்குமார் ஊற்றியதாக தெரிகிறது. இதில், 2 பேரும் பலத்தகாயம் அடைந்து துடிதுடித்தனர்.

உடனே அங்கிருந்து சரத்குமார் ஓடிவிட்டார். பின்னர் ஸ்வேதா, அனுஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வேதாவின் கண் பார்வை பறி போகி இருப்பதாகவும், அனுஷாவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் சந்திரா லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கும், விக்டோரியா ஆஸ்பத்திரிக்கும் சென்று சகோதரிகளிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும் சரத்குமாரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அவரை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு சென்றனர். அங்கு சரத்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக தன்னுடன் வாழ பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்ததால் மனைவி மீதும், இதனை தடுக்க வந்த கொழுந்தியாள் மீதும் சரத்குமார் திராவகம் வீசியதும், போலீசுக்கு பயந்து அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story