விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு ஆவணங்கள், கோப்புகள் அனுப்பும் பணி


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு ஆவணங்கள், கோப்புகள் அனுப்பும் பணி
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 7:56 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு ஆவணங்கள், கோப்புகள் அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த புதிய மாவட்டத்தை கடந்த மாதம் 26-ந் தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அன்று முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமானது கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை ஆகிய 6 தாலுகாக்கள் மற்றும் 558 கிராமங்கள், சங்கராபுரம், ரி‌ஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள், சின்னசேலம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, தியாகதுருகம், வடக்கனந்தல், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய 7 பேரூராட்சிகள், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரி‌ஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி செயல்பட தொடங்கியது. அதேபோல் காவல்துறையை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 காவல் உட்கோட்டங்கள் 28 போலீஸ் நிலையங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் வரும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த அந்தந்த துறைகள் சார்ந்த அரசு ஆவணங்கள், முக்கிய கோப்புகள் ஆகியவை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வாகனங்கள் மூலம் அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அதுபோல் ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் கொடுத்த இலவச மனைப்பட்டா, பசுமை வீடுகள், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களையும் விசாரணை நடத்தி தீர்வு காண வசதியாக அவை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story