அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4-வது சோமவாரவிழா பக்தர் ஒருவர் படியில் உருண்டு ஏறி நேர்த்திக்கடன்


அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4-வது சோமவாரவிழா பக்தர் ஒருவர் படியில் உருண்டு ஏறி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 10 Dec 2019 4:00 AM IST (Updated: 10 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் பக்தர் ஒருவர் படிகளில் உருண்டு ஏறி நேர்த்திக் கடன் செலுத்தினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் சோமவார விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு முதல் சோமவாரம் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று 4-வது சோமவாரவிழா நடைபெற்றது. இதில் குளித்தலை மற்றும் இப்பகுதியைச் சுற்றியுள்ள திரளான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து மலை உச்சிக்குச்சென்று சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

படியில் உருண்டு ஏறி நேர்த்திக்கடன்

இதில் பலர் மலை அடிவாரத்தில் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக இக்கோவில் பாறைகளில் தாங்கள் கொண்டுவந்த பூ, வாழைப்பழங்கள் உள்பட பல பொருட்களைவைத்து தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர். மேலும் பலர் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பொருட்களை கொண்டுவந்து கோவிலில் கொட்டி வழிபட்டனர்.

இதில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் உலக நன்மைக்காவும், தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டும் இக்கோவிலில் உள்ள 1017 படிகளிலும் உருண்டு ஏறி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட்டார்.

Next Story