பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு காரணம் என்ன? கவர்னர் கிரண்பெடி விளக்கம்


பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு காரணம் என்ன? கவர்னர் கிரண்பெடி விளக்கம்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-10T03:32:10+05:30)

பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு காரணம் என்ன? என்பது குறித்து கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திறந்த மடல் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதல்கள் ஏன் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எங்கு வாழ்கிறார்கள்? என்பதுபற்றி விசாரிக்க பெற்றோர்கள் தயக்கம் காட்டக் கூடாது. சரிவர கவனிக்கப்படாத குழந்தை குற்றவாளியாக மாறுவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கான உண்மையான நிலவரம் கண்டறியப்பட்டு அதற்கு தீர்வும் காணப்படவேண்டும். கூட்டு அவசர உணர்வோடு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கவேண்டும்.

பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெண்களை தாக்கும் இந்த குற்றம் பரவலாக உள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க அவரது குடும்பத்தினரின் ஆதரவு இல்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டுமே நான் கூறுகிறேன்.

எனது ஆழ்ந்த கவலை என்னவென்றால் நாம் அனைவரும் பிரச்சினையின் முக்கிய காரணத்தை நிவர்த்தி செய்வதிலிருந்து தெரிந்தோ தெரியாமலோ விலகி செல்வதுபோல் தோன்றுகிறது. இது பெற்றோர் மற்றும் பள்ளியில் முக்கியமானது.

இந்த மனநோயின் உண்மையான மூலத்துக்கு சிகிச்சையளிக்காமல் உள்ளோம். ஒரு சிலரின் செயல்பாடு காரணமாக இந்த சமூகம் மோசமாகி வருகிறது. நமது நாட்டின் நற்பெயரும் பாதிக்கப்படுகிறது. என்னை கேட்டால், இந்த பாலியல் வன்கொடுமை நோயின் வேர் என்ன? இவற்றை யார் செய்கிறார்கள்? இந்த நோய்வாய்ப்பட்ட ஆண்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இந்த மிருகத்தனமான காரியத்தை செய்ய வைப்பது எது?

அவர்களிடம் மனிதநேயம் இல்லையா? அவர்களை இப்படி ஆக்கியது எது? எனது எளிய கேள்வி என்னவென்றால் இந்த செயல்களில் ஈடுபடும் ஆண்கள் ஒரு தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரவில்லையா? அவர்களுக்கு வீடு மற்றும் ஒரு குடும்பம் இல்லையா? அவர்களுக்கு உடன்பிறப்புகள் இல்லையா? அவர்களது உறவினர்களால் அவர்கள் நேசிக்கப்படுவதும், பராமரிக்கப்படுவதும் இல்லையா?

நான் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது இதுபோன்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உரையாடினேன். பின்னர் சிறை நிர்வாகத்தின் பொறுப்பாளராகவும், எனது கற்றறிந்த பதில் என்னவென்றால், இந்த குற்றவாளிகளை குடும்பம் புறக்கணித்ததன் விளைவு இதுவாகும்.

மாணவர்களாக இருக்கும்போது அவர்களை சில பெற்றோர் கைவிடுகின்றனர் அல்லது பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் தங்கள் பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை ஆசிரியர்களும் விட்டுள்ளனர். அவர்களை திருத்த ஒரு போதும் செயலில் ஈடுபடவில்லை.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களை கைவிடாவிட்டால் அவர்கள் தெருக்களில் சுற்றவோ அல்லது ஓடியிருக்கவோமாட்டார்கள். அத்தகையவர்களை கண்காணிக்க போலீஸ் பிரிவும் இல்லை. சமூகமும் அவர்களை கைவிடுகிறது.

அவர்களை புறக்கணிக்கும்போதுதான் தவறுகள் செய்ய தூண்டுகிறது. தங்கள் மனிதாபிமானமற்ற தயாரிப்புகளின் தவறான செயல்களுக்கு அவர்களுடைய குடும்பமும், பள்ளியும் பொறுப்பேற்க வேண்டும்.

போலீசின் ரோந்துப்பிரிவு வேலை செய்யவேண்டிய நேரம் இது. உள்ளூர் போலீஸ் நிலையங்கள் குற்றவாளிகளின் பதிவுகளை அறிந்திருக்கிறது. மேலும் அவற்றை பராமரிக்கிறது. இத்தகையவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குடும்ப ஆலோசனையில் ஈடுபட வேண்டும்.

பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணம் ரோந்து போலீஸ் இல்லாதது. அவசர அழைப்புகளுக்கு அவசரமாக பதிலளிக்க காவல்நிலையங்கள் துடிப்பு மிக்க அதிகாரிகளுடன் இணைக்கப்பட வேண்டும். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதுபோன்ற நோக்கத்திற்காக நிர்பயா நிதியை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை உறுதியானது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாராவது ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் மீண்டும் குற்றம் செய்ய பயப்படுவதை உறுதி செய்ய நிபந்தனைகள் விதிக்கவேண்டும். ஜாமீனின் நிபந்தனைகளை மீறும் சந்தர்ப்பதில் கடுமையான பொறுப்புகளை ஏற்கவேண்டும்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட எந்த நபரும் ரோந்து போலீசாருக்கு தெரிந்திருக்கவேண்டும். குற்றவியல் நீதி அமைப்பில் உள் ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும். இது தற்போது பலவீனமாக உள்ளது.

மனித குலத்தை ஊக்குவிக்கும் எல்லாவற்றுக்கும் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். நிகழும் ஒவ்வொரு குற்றத்திலும் படிப்பினைகளை கற்றுக்கொண்டால் குற்றங்களை தடுக்க முடியும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story