உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகளை சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்


உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகளை சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-10T23:03:23+05:30)

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகளை சீர்செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு மற்றும் படிவம் 3ஏ-ல் புகைப்படத்துடன் ரூ.20 பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் வக்கீல் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் பற்றிய தகவல் சுருக்கம் சான்று புகைப்படத்துடன் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் இவற்றில் ஏதேனும் இரண்டு இணைக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட வேட்பாளர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வரிகள் எதுவும் நிலுவையில் இல்லை என்கிற சான்று இணைக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லை என்று சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரின் சான்று இணைக்கப்பட வேண்டும். வருமான வரி செலுத்தும் சான்று இருப்பின் அதனையும் இணைப்பது அவசியம் ஆகும், என்று கரூர் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சின்னங்கள் ஒதுக்கீடு

இதற்கிடையே இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் 2-வது நாளான நேற்றும் கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பிரதான அரசியல் கட்சியினரும் உள்ளாட்சி தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகின்ற னர். மேலும் கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் சுயேச்சையாக கருதப்படுவார்கள் என்பதால் தலா 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் தங்களது சின்னத்தில் களம் காண உள்ளன. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் சுயேச்சைகள் வேட்பாளர்களுக்காக தலா 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பெட்டிகள்

வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்ததும் சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்று வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, தாந்தோன்றி, கரூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்குப்பெட்டிகளை மண்எண்ணெய் போட்டு துடைத்து அதனை புதுப்பித்து சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 3,660 வாக்குப்பெட்டிகள் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் இருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story