மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 4:30 AM IST (Updated: 11 Dec 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடகா, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிபந்தனையுடன் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மேட்டூர் அணை

இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 993 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதன்காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கால்வாய் பாசனத்துக்கு வழக்கம் போல் வினாடிக்கு 750 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் அணைக்கு நீர்வரத்தான வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை விட, அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 750 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக மேட்டூர் அணை தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

Next Story