திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோட்டையில் 273 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது


திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோட்டையில் 273 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 11 Dec 2019 4:15 AM IST (Updated: 11 Dec 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மலைக்கோட்டையில் திருக்கார்த்திகையையொட்டி 273 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மலைக்கோட்டை,

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மிகவும் பழமையான இந்த மலைக்கோட்டை 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது.

இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழா

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரம் உள்ள இரும்பு கோபுரத்தில் பிரமாண்ட செப்புக்கொப்பரை வைக்கப்பட்டு, அதில் 300 மீட்டர் பருத்தி துணியை சுற்றி திரியாக வைத்து, அதில், 900 லிட்டரில் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி தயார் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த பணிகள் அனைத்தும் நேற்று காலை நிறைவு செய்யப்பட்டு மகாதீபம் ஏற்றுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. திருக்கார்த்திகையையொட்டி நேற்று மாலை 5.40 மணி அளவில் தாயுமானசுவாமி கோவிலிலிருந்து மேள தாளங்களுடன், வாணவேடிக்கைகள் முழங்க தீப்பந்தத்துடன் செவ்வந்திவிநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகள் புறப்பாடாகி உச்சிமலைக்கு கீழ் பகுதியில், உச்சிப்பிள்ளையார் கோவில் முன்பாக சித்திரை மண்டபத்தில் எழுந்தருளினர்.

மலை உச்சியில் மகா தீபம்

மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘சிவ, சிவ’ என்றும், ‘அரோகரா, அரோகரா’ என்றும் கோஷங்கள் எழுப்பி சுவாமியையும், தீபத்தையும் வழிபட்டனர். அதே போல மலைக்கோட்டையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் மலைக்கோட்டை சுற்றியுள்ள ஏராளமான வீடுகளிலும், சிறிய விளக்குகளை கொண்டு கார்த்திகை தீபங்கள் ஏற்றி சிவனையும், அம்பாளையும் வழிபட்டனர்.

மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட இந்த கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். இதே போல மலைக்கோட்டையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் சுடலை தீபம் எனப்படும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

மலைக்கோட்டை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு, மலையின் மேல் இருந்து கீழே இறங்கி மலைக்கோட்டையை சுற்றியுள்ள உள் வீதிகளிலும், வெளி வீதிகளிலும் சுவாமியும், அம்பாளும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story