கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2019 4:30 AM IST (Updated: 11 Dec 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஓடை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம், ரத்த தான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மதுரை ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. எனினும் வருவாய் துறையும், நகரசபை நிர்வாகமும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தாமதப்படுத்தின. தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 1.4.2018 முதல் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு அனைத்து வரிவிதிப்புகளும் நகரசபை நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

பின்னர் அந்த கட்டிடங்களுக்கு மின்வாரியம் மூலம் வழங்கப்பட்ட மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே ஓடை ஆக்கிரமிப்பாளர்கள், மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த தீபாவளி பண்டிகை வரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்றும், இருந்தது இருந்தபடியே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஓடை ஆக்கிரமிப்பாளர்களோ தங்களது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். ஐகோர்ட்டு உத்தரவை மீறியவர்கள் மீது வருவாய் துறையினரும், காவல் துறையினரும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையே ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் மின்வாரியத்தினர் மின் இணைப்பு வழங்கி வருகின்றனர். இது ஐகோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே ஓடை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியதைக் கண்டித்தும், மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் விஜயா, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், உதவி பொறியாளர் மாரீசுவரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மின் மீட்டர்களை அகற்றிய கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதில் ஏதாவது முறைகேடுகள் நிகழ்ந்து இருந்தால், எழுத்துப்பூர்வமான புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story