திருச்சி வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.21¼ லட்சம் மோசடி


திருச்சி வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.21¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 Dec 2019 3:45 AM IST (Updated: 11 Dec 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி சாலை ரோட்டில் உள்ள பரோடா வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.21¼ லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி நகை மதிப்பீட்டாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி உறையூர் சாலை ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. பல வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வங்கியில் தங்கநகை அடகு வைப்பதன் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், அவசர தேவைக்கான கடன் என குறைந்த வட்டியில் வழங்கப்படுவது வழக்கம்.

தங்க நகைகளை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம், நகை அசல்தானா? என ஆய்வு செய்து மதிப்பிட ‘அப்ரைசர்’ எனப்படும் நகை மதிப்பீட்டாளர் ஒருவரை வங்கி பணியமர்த்தி உள்ளது. அதன்படி, நகை மதிப்பீட்டாளராக பரோடா வங்கியில் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள விஸ்வாஸ்நகரை சேர்ந்த சதீஷ்(வயது39) என்பவர் கடந்த 21.4.2015 முதல் பணியாற்றி வந்தார்.

கவரிங் நகைகள் அடகு

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி அன்று பரோடா வங்கியில் மேலதிகாரிகள் அடங்கிய குழுவினர் தணிக்கையில் ஈடுபட்டனர். வங்கியில் வைப்புத்தொகை விவரம், தங்கநகை அடமானத்தின் பேரில் எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது? என்றும், அடமானம் வைக்கப்பட்டுள்ள நகை அசல்தானா? என்றும் ஆவணங்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வங்கியில் வாடிக்கையாளர்கள் 6 பேர், தங்கநகை அடமானத்தின் பேரில் ரூ.21 லட்சத்து 22 ஆயிரத்து 37-க்கு அடமானம் வைத்திருந்தனர். அவர்கள் அடகு வைத்த நகைகளை ஆய்வு செய்தபோது அவை கவரிங் நகைகள் என தெரியவந்தது. இந்த கவரிங் நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் வழங்க, வங்கியின் நகை மதிப்பீட்டாளரான சதீஷ் உடந்தையாக இருந்து, வங்கி அதிகாரிகளை ஏமாற்றி அவர்களுக்கு கடன் வழங்க உதவியது தெரியவந்தது.

மதிப்பீட்டாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு

எனவே, வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சத்து 22 ஆயிரம் மோசடி செய்ய உடந்தையாக இருந்த மதிப்பீட்டாளர் சதீஷ் மற்றும் வாடிக்கையாளர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரோடா வங்கியின் முதுநிலை மேலாளர், திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் வேதரத்தினத்திடம் புகார் மனு கொடுத்தார். அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சதீஷ் மற்றும் வாடிக்கையாளர்கள் நந்தகுமார், பாலசுப்பிரமணியன், சரவணன், சேவியர் துரைராஜ், முஸ்தபா மற்றும் அக்பர் ஷெரீப் ஆகிய 7 பேர் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story