வேலூரில் வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது - கிலோ ரூ.50 முதல் விற்பனை


வேலூரில் வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது - கிலோ ரூ.50 முதல் விற்பனை
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 5:31 PM GMT)

வேலூரில் வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.50 முதல் விற்பனையானது.

வேலூர், 

கடந்தசில நாட்களாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 80 டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பால் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயரத்தொடங்கியது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.190 வரை விற்பனையானது. சாம்பார் வெங்காயமும் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்கமுடியாமல் சிரமப்பட்டனர்.

இதனால் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. வேலூர் மார்க்கெட்டுக்கும் தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் வெங்காய குடோன்கள், கடைகளில் சோதனை நடத்தினர்.

தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதாலும், அதிகாரிகளின் சோதனையாலும் வெங்காயத்தின் விலைகுறைந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நேற்று வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்திருந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.120 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது.

ஒரேநாளில் வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.

Next Story