தொடர் மணல் திருட்டால் திருமணஞ்சேரி காட்டாற்று தடுப்பணைக்கு ஆபத்து விவசாயிகள் கவலை


தொடர் மணல் திருட்டால் திருமணஞ்சேரி காட்டாற்று தடுப்பணைக்கு ஆபத்து விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 12 Dec 2019 4:15 AM IST (Updated: 12 Dec 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மணல் திருட்டால் திருமணஞ்சேரி காட்டாற்று தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாழாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதி வானம் பார்த்த பூமியாகும். ஏரி, குளங்கள், ஆழ்குழாய் பாசனம் மூலமே அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இன்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் பெரும் சிரமப்பட்டனர். விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ் சேரியில் தஞ்சை மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது.

இதன் மூலம் மழைக்காலங்களில் காட்டாற்றில் வரும் தண்ணீர் தேக்கி வைத்து அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரம்பி விவசாயம் செய்யலாம் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தடுப்பணையை சுற்றி பல மீட்டருக்கு பள்ளங்களை தோண்டி தொடர் மணல் திருட்டு நடைபெற்றதால் தடுப்பணைக்கு தண்ணீர் வருவதே பெரும் சவாலாக இருந்தது.

மணல் திருட்டு

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததால் காட்டாற்றில் தண்ணீர் வந்தது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆனால் குளங்களுக்கு தண்ணீர் செல்லாத வகையில், மணல் குவியல்களை கொட்டி வைத்துள்ளனர். மேலும் தண்ணீர் உள்ள நிலையில், தடுப்பணைக்கு அருகேயே ஈரம் கொட்ட, கொட்ட லாரிகளில் மணல் அள்ளி கடத்தி செல்லப்படுகிறது. இதனால் அணை வழுவிழுந்து ஆபத்து உருவாகும் நிலை உள்ளது. அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும், நிலத்தடி நீர்மட்டம் பெருகும், நன்கு விவசாயம் செய்யலாம் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தொடர் மணல் கொள்ளையால் கவலை அடைந்துள்ளனர்.

எனவே கறம்பக்குடி திருமணஞ்சேரி காட்டாற்று தடுப்பணை பகுதியில் நடைபெறும், தொடர் மணல் திருட்டை தடுத்து அப்பகுதி விவசாயத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story