விழுப்புரம் அருகே, தொழிலாளியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி


விழுப்புரம் அருகே, தொழிலாளியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-12T00:40:06+05:30)

விழுப்புரம் அருகே கொலுசை அடகு வைத்து மதுகுடித்த தொழிலாளியை மனைவி உயிருடன் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கண்டமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா(33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை செந்தில் மதுகுடித்து செலவு செய்து வந்தார். மேலும் வேலைக்கு செல்லாத நாட்களில் வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து மதுகுடிப்பது வழக்கம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் சித்ராவின் வெள்ளி கொலுசை செந்தில் எடுத்துச்சென்று அடமானம் வைத்துள்ளார். அந்த பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை சரி செய்து விட்டு, மீதி பணத்தில் மது வாங்கி குடித்தார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்து தூங்கிவிட்டார்.

கொலுசை அடமானம் வைத்து மது குடித்ததை அறிந்த சித்ரா, கணவர் மீது கடும் ஆத்திரமடைந்தார். உடனே வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து செந்தில் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் கணவரை தீ வைத்து எரித்த சித்ரா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி கொலுசை அடமானம் வைத்து மதுகுடித்த கணவரை, மனைவியே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் கண்டமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story