பத்ராவதி பத்ரகிரி சுப்பிரமணிய சாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலம்


பத்ராவதி பத்ரகிரி சுப்பிரமணிய சாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 8:06 PM GMT)

பத்ராவதியில் உள்ள பத்ரகிரி சுப்பிரமணிய சாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடந்தது.

பத்ராவதி,

சிவமொக்கா-சிக்கமகளூரு மாவட்ட எல்லைப்பகுதியான பத்ராவதி தாலுகா பத்ரகிரியில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலின் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பு என்னவென்றால், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்களை எழுதி திருவல சீட்டை சாமியின் பாதத்தில் போடுவார்கள். அந்த திருவல சீட்டில் எந்த குழந்தையின் பெயர் வருகிறதோ, அந்த குழந்தையை சக்தி தேவியாக பாவித்து, அந்த குழந்தைக்கு புனித நீராடியும், புத்தாடை அணிவித்தும் நெய்கவசம் எடுக்கப்படும். பின்னர் அந்த குழந்தை தான் அகண்ட தீபத்தை ஏற்றும்.

திருக்கார்த்திகை கோலாகலம்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி கோவிலில் பத்ரகிரியாரின் குருபூஜையும், பரணி தீப திருவிழாவும் நடைபெற்றது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு விளா பூஜை, காலை 8 மணிக்கு காலை சந்தி பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு ஜோதி தரிசனமும், இரவு 11 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 4 மணிக்கு கோவிலில் விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு விளா பூஜை, காலை 8 மணிக்கு காலை சந்தி பூஜை, நண்பர்கள் 12 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

அகண்ட தீபம் ஏற்றிய தமிழக சிறுமி

முன்னதாக நேற்று முன்தினம் மாலை அகண்ட தீபத்தை ஏற்றுவதற்காக, சாமியின் திருபாதத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெயர்கள் திருவல சீட்டில் எழுதி போடப்பட்டது. இதில் தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்த 6 வயது சிறுமியான காவேரியின் பெயர் வந்தது. இதையடுத்து காவேரியை சக்திதேவியாக பாவித்து, புத்தாடை அணிவிக்கப்பட்டது.

பின்னர் சரியாக இரவு 6.05 மணிக்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அகண்ட தீபத்தை காவேரி ஏற்றினாள். அப்போது பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என்று கரகோஷம் எழுப்பினர். இது விண்ணை பிளந்தது.

இந்த நிகழ்ச்சியில் பத்ராவதி தொகுதி எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர், மடாதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story