வீரபாண்டி அருகே நெஞ்சை பதற வைத்த விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி லாரி சக்கரத்தில் சிக்கி பலி


வீரபாண்டி அருகே நெஞ்சை பதற வைத்த விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி லாரி சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 9:05 PM GMT)

வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த தம்பதி, எதிரே வேகமாக சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக அவர்களது 1½ வயது குழந்தை உயிர் தப்பியது.

உப்புக்கோட்டை, 

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). அப்பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களுக்கு 1½ வயதில் ஈஸ்வரபாண்டியன் என்ற மகன் உள்ளான்.

இந்தநிலையில் நேற்று சின்னமனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேல்முருகன் தனது வீட்டிலிருந்து மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி விலக்கு பகுதியில் வந்தனர். அப்போது எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. இதற்கிடையே அந்த டிராக்டரை முந்தி கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. இதனால் அதிர்ந்து போன வேல்முருகன் திடீர் ‘பிரேக்’ போட்டார். அப்போது சாலையில் கிடந்த மணலில் மோட்டார் சைக்கிள் சறுக்கி, தடுமாறியது.

இதில் கீழே விழுந்த மோட்டார் சைக்கிள், லாரியின் அடியில் சிக்கியது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வேல்முருகனும், வீரலட்சுமியும் லாரியின் சக்கரத்தில் சிக்கினர். குழந்தை ஈஸ்வரபாண்டியன் மட்டும் அவர்களை விட்டு விலகி லாரியின் பின்னால் வீசப்பட்டான். அவன் காயத்துடன் உயிர்தப்பினான்.

இதற்கிடையே லாரியின் சக்கரத்தில் சிக்கிய கணவன்-மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டனர். இதில் படுகாயமடைந்த ேவல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

பின்னர் விபத்து சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த வீரலட்சுமியையும், குழந்தை ஈஸ்வரபாண்டியனையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் குழந்தை ஈஸ்வரபாண்டியன் தப்பியது அதிசயம் என்றே சொல்லலாம். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பின்னால் அமர்ந்தபடி வீரலட்சுமி தனது குழந்தையை கையில் வைத்திருந்தார். மோட்டார் சைக்கிள் சறுக்கியபோது, லாரியின் அடியில் 3 பேருமே சிக்கினர். இதில் குழந்தை ஈஸ்வரபாண்டியன் லாரியின் நடுபகுதியில் விழுந்ததால் லாரி சக்கரத்தில் அவன் சிக்கவில்லை. இதனால் காயத்துடன் தப்பினான். இதற்கிடையே லாரியின் அடியில் இருந்து குழந்தை தப்பிய சில வினாடிகளிலேயே பின்னால் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சின் டிரைவர், விபத்தை கண்டு உடனடியாக பஸ்சை சாலையோரம் திருப்பினார். இதனால் சாலையில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் ராயப்பன்பட்டி ஓசன்நகரை சேர்ந்த ஜான் போஸ்கோ (33) என்பவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story