குடியுரிமை திருத்த மசோதா: பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் அமைச்சர் பேச்சு


குடியுரிமை திருத்த மசோதா: பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 9:13 PM GMT)

நாட்டு மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைத்து, பிரிவினையை தூண்டும் நோக்கத்துடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

போராட்டம் தொடரும்

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

பாரதீய ஜனதா பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தி நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வேலையை செய்து வருகிறது. அதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படு கிறது. அதன்படி புதுச்சேரியிலும் மெழுகுவர்த்தி ஏந்தி எங்களுடைய கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்கிறோம். காங்கிரஸ் பேரியக்கம் மக்கள் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ போராடி வருகிறது. நாட்டு மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் விஜயவேணி எம்.எல்.ஏ., உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

வெங்காய மாலை...

முன்னதாக வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பலர் வெங்காய மாலை அணிந்தபடி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.


Next Story