வளநாடு அருகே விழிப்புணர்வுக்காக அரசு பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்


வளநாடு அருகே விழிப்புணர்வுக்காக அரசு பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
x
தினத்தந்தி 13 Dec 2019 4:15 AM IST (Updated: 12 Dec 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

வளநாடு அருகே விழிப்புணர்வுக்காக அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகிறார்கள்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச்சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). தனியார் வங்கி ஒன்றின் கிராமப்புற வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இயற்கை ஆர்வலரான பாலசுப்பிரமணியன் விலங்குகள் மீதும் தீராத காதல் கொண்டவர்.

வாடிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன், குதிரைகளையும் இவர் வளர்த்து வருகிறார். அத்துடன், ‘நாட்டு இன குதிரைகளை காப்போம்’ என்ற வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து, அழிவின் விளிம்பிற்கு செல்லும் நாட்டு இன குதிரைகளை மீட்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக நாட்டு இன குதிரைகளை அனைவரும் வாங்கி வளர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

காற்று மாசு

இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் குத்தகைக்கு எடுத்த நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகத்தின் மகன் அழகர்சாமிக்கு அந்த குதிரைகள் மீது ஒரு பற்று வந்தது. வளநாடு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் அவன் பள்ளி நேரம் முடித்து வந்து, குதிரைக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டு வந்தான். வளர்ந்து வரும் நாகரிக உலகில் விதவிதமான வாகனங்கள் அணிவகுக்க, அதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டு ஆக்சிஜனை கூட காசுகொடுத்து விலைக்கு வாங்கும் நிலை வந்து விட்டது என்று எண்ணி வருந்திய பாலசுப்பிரமணியன் தான் வளர்க்கும் குதிரையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிட முடிவு செய்தார்.

பள்ளிக்கு குதிரையில் பயணம்

அதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், சிறுவன் அழகர்சாமியையும், அவனுடைய வீட்டின் அருகில் வசிக்கும் 6-ம் வகுப்பு மாணவன் வேலுவையும் குதிரையில் பள்ளிக்கு செல்ல பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தினார். அதன்படி இருவரும் தினமும் குதிரை மீது அமர்ந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.

அவர்கள் பள்ளிக்கு சென்றதும் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் குதிரையை கட்டி வைக்கிறார்கள். அங்கு அவை தனது உணவிற்கான மேய்ச்சலை முடிக்கின்றன. மதிய உணவு இடைவேளையின் போது 2 மாணவர்களும் வந்து குதிரைகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு, அவற்றை வேறு இடத்தில் கட்டி வைத்துச்செல்கின்றனர். பின்னர் பள்ளி முடிந்ததும் மாலையில் மீண்டும் குதிரையில் அமர்ந்து தங்களின் வீட்டுக்கு வருகிறார்கள். குதிரைகள் குறைந்த அளவே உயரம் கொண்டதால் மாணவர்கள் எளிதில் அமர்ந்து செல்ல முடிகிறது.

விழிப்புணர்வு

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறும்போது, நம் முன்னோர்கள் பல்வேறு விதமான பணிகளுக்கும், பயணத்திற்கும் குதிரையைத் தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது நாட்டு இன குதிரைகள் இனம் வெகுவாக அழிந்து வருகின்றது. ஆகவே அந்த இனத்தை மீட்பது தான் முதல் நோக்கம். அதன் அடிப்படையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். குதிரை வளர்ப்பு முறை என்பது மிகவும் எளிதான ஒன்று தான். ஆனால் அதை பராமரிக்க அதிக சிரமம் உள்ளதாக பலரும் தவறாக எண்ணி தான் குதிரை வளர்ப்பில் மும்முரம் காட்டவில்லை. இனி வரும் காலங்களில் அனைவரும் நாட்டினக் குதிரைகளை வளர்த்து அதில் அமர்ந்து பயணம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.


Next Story