திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Dec 2019 3:45 AM IST (Updated: 12 Dec 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 10-ந் தேதி மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். மேலும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதாவது வருகிற 20-ந் தேதி வரை மகா தீபத்தை தரிசனம் செய்யலாம். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 11.10 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமி நேற்று காலை 11.05 மணியளவில் நிறைவடைந்தது.

நேற்று காலையிலும் சில பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர் 2-வது நாள் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்வு ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்ட 2-வது நாளும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் திருவூடல் நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார்.

அதன்படி மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர் 2-வது நாளான நேற்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தார். அருணாசலேஸ்வரருடன், பராசக்தி அம்மனும், துர்கை அம்மனும் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கிரிவலப்பாதையில் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கிரிவலத்தையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

மேலும் அடிஅண்ணாமலை ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி முன்பு திரண்டு நின்றிருந்த இத்தாலியை சேர்ந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து அவர்கள் அந்த பள்ளி வளாகத்தில் பஜனை செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை தொடர்ந்து அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்பலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது. 

Next Story