மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், மேலப்பாளையம் ரவுண்டானா, சந்தை முக்கு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
துப்புரவு பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மாதத்தின் கடைசி வாரத்தில் தான் சம்பளம் அளிக்கப்படுகிறது. ஒரு சில மாதங்களில் மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி சம்பளம் வழங்க வேண்டும். எங்களுக்கு வருங்கால வைப்புநிதி திட்டத்தில் பணம் பிடிப்பதாக கூறினார்கள். இதுவரை பிடிக்க வில்லை. கையுறை கிழிந்து விட்டால் புதிய உறை கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் சொந்த பணத்தில் கையுறை வாங்க வேண்டியது இருக்கிறது. உபகரணங்கள் சேதமடைந்தால் புதிய உபகரணங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பணியாளர்கள் வேலைக்கு சென்றனர்.
Related Tags :
Next Story