புளியங்குடி அருகே, டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டிகளுக்கு தீவைப்பு; 2 பேர் கைது


புளியங்குடி அருகே, டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டிகளுக்கு தீவைப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-13T00:10:34+05:30)

புளியங்குடி அருகே டாஸ்மாக் கடையில் மதுபான பெட்டிகளுக்கு தீவைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தை ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கடையின் ஜன்னலை உடைந்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அப்போது, அங்கிருந்த மதுபான பெட்டிகளை தீவைத்து கொளுத்தினார்கள்.

மேலும் அந்த இடத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் துண்டு பிரசுரங்கள் கிடந்தன. இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளம் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் காளிதாஸ் (வயது 32), கடையநல்லூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சி செயலாளர் செல்வராஜ் (30) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், காளிதாஸ், செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story