அச்சன்கோவில் ஆபரண பெட்டி 16-ந்தேதி தென்காசி வருகை - சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு


அச்சன்கோவில் ஆபரண பெட்டி 16-ந்தேதி தென்காசி வருகை - சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 6:40 PM GMT)

அச்சன்கோவில் ஆபரண பெட்டி வருகிற 16-ந்தேதி தென்காசிக்கு வருகிறது. இதற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தென்காசி, 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழா இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டி வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.

தொடர்ந்து ஆபரண பெட்டி தென்காசி வழியாக அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அன்று மதியம் 2 மணிக்கு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். ஆபரண பெட்டியில் அய்யப்பன் உபயோகித்ததாக கூறப்படும் தங்க வாள் மற்றும் கவசங்கள் உள்ளது.

இந்த நிலையில் ஆபரண பெட்டி வரவேற்பு குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தலைவர் ஏ.சி.எஸ்.ஹரிஹரன் தலைமை தாங்கினார். அய்யப்ப சேவா சங்க தலைவர் அழகிரி முன்னிலை வகித்தார். செயலாளர் மாடசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் வருகிற 16-ந்தேதி தென்காசிக்கு வருகை தரும் அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. விளம்பரத்திற்காக சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று அனுமதி மறுத்த கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சபரிமலையில் பக்தர்களுக்கு தடையின்றி அன்னதானம் கிடைத்திட அனைவரும் நன்கொடை அளிக்க வேண்டும். சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் பந்தளராஜா குடும்பத்தினருக்கு முழு ஆதரவை அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஏ.சி.மணி, ராமசுப்பு, அய்யப்பன், தங்கவேல், முத்துசாமி, மாரிமுத்து, கண்ணன், சபரி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

Next Story