கோத்தகிரி அருகே, குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலிகள் - பொதுமக்கள் பீதி


கோத்தகிரி அருகே, குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலிகள் - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-13T01:23:51+05:30)

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் புலிகள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, புலி, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் வனப்பகுதியையொட்டி தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையோரத்தில் ஈளாடா கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. கடந்த மாதம் ஈளாடாவில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் புலி நடமாடியது. இதை கண்ட பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது தேயிலை தோட்டத்தில் உலா வரும் புலியை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈளாடாவில் சுண்டட்டி, கதவுத்தொரை ஆகிய குடியிருப்பு பகுதியில் 2 புலிகள் சுற்றித்திரிகின்றன. அவை தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வருவதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலிகளால் கடந்த 2 மாதத்தில் 6 மாடுகள், 12 ஆடுகள் இறந்து உள்ளன. புலிகள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. அவைகளால் கால் நடைகளை தொடர்ந்து, மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலிகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story