திருச்சியில் அதிகாரிகள் நடவடிக்கை: சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த 6 வீடுகளுக்கு ‘சீல்’


திருச்சியில் அதிகாரிகள் நடவடிக்கை: சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த 6 வீடுகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 Dec 2019 4:30 AM IST (Updated: 13 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த 6 வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் பீமநகரில் சமோசா குடோன் ஒன்றும் மூடப்பட்டது.

திருச்சி,

பானிபூரி என்பது திண்பண்டம் ஆகும். வட இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த பானிபூரியானது தற்போது தமிழகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, மாலை வேளையில் ஆர்வமாக வாங்கி சாப்பிடும் திண்பண்டமாக பிரபலமாகி விட்டது. இதில் சிறிய அளவிலான பூரியில் சுவைநீரை ஊற்றி, உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து கொடுக்கப்படும். புளி, மிளகாய்ப்பொடி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை கலந்த நீருடன், சுவை கூட்டப்பட்ட உணவாக அது இருக்கும். திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு பானிபூரி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாநகரில் மேலதேவதானம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சில வீடுகளில், வடமாநிலத்தை சேர்ந்த சிலர் மொத்தமாக பானிபூரி தயார் செய்து வினியோகிக்கிறார்கள். இந்த பானிபூரி செய்யும் இடம் சுகாதார சீர்கேடாகவும், வி‌‌ஷ ஜந்துகள் வாழும் இடத்தில் அவை தரமற்றதாக தயாரிக்கப்படுவதாகவும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது.

6 வீடுகளுக்கு ‘சீல்’

இதையடுத்து, நேற்று டாக்டர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட 4 பேர் குழு, மேலதேவதானத்தில் பானிபூரி தயாரிக்கும் ஓட்டு வீடுகள் நிறைந்த இடத்திற்கு சென்றனர். அங்கு 6 வீடுகளில் வடமாநிலத்தை சேர்ந்த ராஜூ, கமல்சிங் ஆகியோர் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பானிபூரி உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கிழிந்த கோரைப்பாயில் மைதாமாவு, ரவை, பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் ஊற்றி, அதன்மீது சிலர் சாந்து குழைப்பதுபோல் கால்களால் மிதித்து, குழைத்து கொண்டிருந்தனர். அந்த வீடு முழுவதும் ‘பான்பராக்’ எச்சில் துப்பப்பட்டு சுகாதாரமற்ற முறையில் இருந்தது. மேலும் ஏற்கனவே பயன் படுத்தப்பட்ட பழைய எண்ணெய் கொண்டு பானிபூரி தயார் ஆகி கொண்டிருந்ததை கண்டு, அந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த வீடுகளுக்குள் ஆங்காங்கே எலிப்பொந்துகள் காணப்பட்டன. சில பொந்துகளில் இருந்து எலிகள் வெளியே வருவதும், உள்ளே போவதுமாக இருந்தன. மூக்கை பிடித்துக்கொண்டு ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு பானிபூரி தயார் செய்வதை சகிக்க முடியாமல் உடனடியாக 6 ஓட்டு வீடுகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அத்துடன் அங்கு சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்க காரணமாக இருந்த உரிமையாளர்களான ராஜூ, கமல்சிங் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்கப்பட்டது.

சமோசா குடோன் மூடல்

இதேபோல் திருச்சி பீமநகர் கண்டித்தெருவில் ரமே‌‌ஷ் என்பவர் நடத்தி வந்த சமோசா உற்பத்தி குடோனும் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாக கிடைத்த தகவலின்பேரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சமோசா தயாரிக்க வைத்திருந்த பொருட்கள் மிகவும் தரமற்றதாக காணப்பட்டது. அங்கு பணியாளர்களை கொண்டு சமோசா தயார் செய்து, அவை மாநகரில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் வினியோகிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சமோசா குடோனும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

வேறு நல்ல இடத்தை தேர்வு செய்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்த பின்னரே சமோசா தயாரிக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் நடவடிக்கை

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா கூறியதாவது:-

மேலதேவதானத்தில் இயங்கி வந்த பானிபூரி மசாலா தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு அனைத்துமே காலாவதியானவை. சந்தையில் குப்பையில் வீசியதை பானிபூரி தயாரிக்க பயன்படுத்தி வருகிறார்கள். தயாரிப்பு கூடம் மிகவும் சுகாதாரமற்ற முறையில் ஆங்காங்கே எச்சில் துப்பப்பட்ட நிலையில் காணப்பட்டது. கிழிந்த பாய்கள், லுங்கிகள், அழுக்கான துணிகளில் பானிபூரிக்கு தயாராகும் உற்பத்தி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ஏகப்பட்ட எலிகள் நடமாட்டத்தையும் காண முடிந்தது. இங்கு தயாரிக்கப்படும் பானிபூரிதான் திருச்சி மாநகர் முழுவதும் வினியோகம் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். எனவே, குழந்தைகள், மாணவர்கள் பானிபூரி சாப்பிட்டு வயிறு உபாதைகள் உள்ளிட்ட நோய்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்பதால், 6 வீடுகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல் பீமநகரில், தரமற்ற முறையில் சமோசா தயாரித்த குடோன் ஒன்று ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story