வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 9:28 PM GMT)

வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி தலைமையில் லாரி உரிமையாளர்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டு சென்றனர். பின்னர் வாங்கிலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மத்திய அரசு வாகனங்களுக்கு காப்பீடு செய்வதில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வர முடிவு செய்து, விரைவில் அதை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் லாரி தொழில் மட்டும் இன்றி இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

எனவே வாகன காப்பீட்டில் மாற்றங்கள் செய்யப்படும் ஷரத்துக்களை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு வாகனம் விபத்துக்கு உள்ளானால் முதல் தகவல் காப்பீட்டு நிறுவனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதால், அதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும்.

விபத்துக்கு உள்ளான வாகனத்தை பழுது பார்க்க பணிகளை மேற்கொள்ளும் போது உதிரி பாகங்கள் மாற்றப்படும் நிலையில் அவற்றிற்கான தேய்மானம் அதிகபட்சமாக 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதை குறைத்து பழைய முறையான 50 சதவீதம் என்பதையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காப்பீட்டு தொகை

ஒரு வாகனம் ‘டோட்டல் லாஸ்’ முறையில் செட்டில் செய்யப்பட்டால் மாற்று வாகனம் வாங்கினால் மட்டுமே காப்பீடு கொடுக்கப்படும் என்பதை நீக்கி, நலிவடைந்த வாகன உரிமையாளர் மீண்டும் வாகனம் வாங்க முடியாத சூழலில் அவருக்கு அந்த காப்பீட்டு தொகையினை முழுமையாக வழங்க வேண்டும்.

விபத்துக்கு உள்ளான வாகனத்தை ‘டோட்டல் லாஸ்’ முறையில் செட்டில் செய்யும் போது வாகனத்தின் பதிவு சான்றிதழை சரண்டர் செய்து, சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே உரிய தொகை கிடைக்கும். இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், வாகனங்களின் காப்பீட்டு தொகையை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், ஆட்டோநகர் அசோசியேசன் தலைவர் பழனிசாமி, தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உப தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story