கொம்பாக்கம் பகுதியில், திடீரென ரேஷன்கடைகளில் - இலவச அரிசி வினியோகம்


கொம்பாக்கம் பகுதியில், திடீரென ரேஷன்கடைகளில் - இலவச அரிசி வினியோகம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:05 PM GMT (Updated: 12 Dec 2019 10:05 PM GMT)

ரொக்கப்பணம் அறிவிக்கப்பட்ட நிலையில் ரேஷன்கடைகளில் நேற்று திடீரென இலவச அரிசி வழங்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அரிசிக்கு பதிலாக பணம்தான் வழங்கவேண்டும் என்று கவர்னர் வற்புறுத்திய நிலையில் 5 மாதத்துக்கு இலவச அரிசிக்கான பணம் விரைவில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட கொம்பாக்கம் ரேஷன்கடைகளில் நேற்று சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது.

இதைத்தொடர்ந்து இலவச அரிசி வாங்க பொதுமக்கள் ரேஷன்கடையில் குவிந்தனர். அப்போதுதான் அந்த அரிசியானது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மார்ச் மாதத்தில் வழங்க வேண்டிய அரிசி என்பதும், அப்போது வழங்கப்படாததால் அதை தற்போது வழங்குவதும் தெரியவந்தது. இதேபோல் இன்னும் சில தொகுதிகளில் மார்ச் மாதத்துக்கான இலவச அரிசி வழங்கப்படாமல் உள்ளது.

அந்த அரிசியும் விரைவில் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசு அறிவித்ததுபோல் 5 மாதத்துக்குரிய இலவச அரிசிக்கான பணம் விரைவில் அனைவரது வங்கிக்கணக்கிலும் செலுத்தப்பட உள்ளது.

Next Story