பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - 45 பேர் கைது


பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - 45 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2019 4:00 AM IST (Updated: 13 Dec 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணியின் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஹரிபாஸ்கர் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளித்த அ.தி.மு.க.வையும் கண்டித்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து வேன் மூலம் அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகே குடியுரிமை சட்ட மசோதா திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மாவட்ட இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, சட்ட மசோதா நகலை கிழித்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 26 பேரை அரியலூர் போலீசார் கைது செய்து, ஒரு தனியார் மண்படத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story