மாவட்டத்தில், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்கும் நடவடிக்கை தீவிரம் - கலெக்டர் பிரபாகர் தகவல்


மாவட்டத்தில், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்கும் நடவடிக்கை தீவிரம் - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:00 PM GMT (Updated: 13 Dec 2019 5:21 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை தணிக்கை செய்து அவற்றை அழித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரி கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக கூட்டு தணிக்கை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தாசில்தார்கள் தலைமையில் கூட்டு குழுவினர் வீரமலை பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குளத்தை கண்டுபிடித்து அவற்றை பொக்லைன் எந்திரம் மூலமாக மணல் கொட்டி முற்றிலும் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை உண்பதால் கார்சினோஜென் எனப்படும் புற்றுநோய், தோல் நோய்கள் மற்றும் ஆண்களுக்கு உடல் ரீதியாக பிரச்சினைகள் வருகின்றன. எனவே டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, இந்த மீன்களை அழித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக தாசில்தார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மீன் வளத்துறை அதிகாரிகளை கொண்ட கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை அழிக்க கூட்டு தணிக்கை குழுக்களால் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவிலும் கடந்த 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையில் இதுவரை 107 மீன் வளர்ப்பு குளங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதில் 73 குளங்கள் பொக்லைன் மூலமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் இது போன்ற குளங்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குளங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் மேற்கண்ட கூட்டு குழுக்களால் ஆய்வுகள் மேற்கொண்டு கண்டறிந்து முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story