மாவட்ட செய்திகள்

தன்னிடம் நெருக்கமாக இருந்த பெண்ணை கொலை செய்த செல்போன் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை + "||" + The woman who was close to him To the murdered cellphone shopkeeper Life sentence

தன்னிடம் நெருக்கமாக இருந்த பெண்ணை கொலை செய்த செல்போன் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை

தன்னிடம் நெருக்கமாக இருந்த பெண்ணை கொலை செய்த செல்போன் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை
கட்டிய கணவரை உதறிவிட்டு தன்னிடம் நெருக்கமாக இருந்த பெண்ணை கொலை செய்த செல்போன் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள சித்தோடு கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் கார்த்தி என்கிற மணிகண்டன் (வயது 31). இவர் ஈரோட்டை அடுத்து உள்ள அய்யன்தோட்டம் வீதி பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.


இந்த பகுதியை அடுத்து உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சுப்பிரமணி (53), என்பவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவரது மகள் கார்த்திகா (23). இவர் திருமணமாகி ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியில் கணவருடன் இருந்தார். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கட்டிய கணவரை உதறித்தள்ளிய கார்த்திகா, வாய்க்கால் மேடு பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

அப்போது அவருக்கு செல்போன் கடை வைத்து இருந்த கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அவர் செல்போன் கடைக்கு வந்து நெருக்கமாக பழகினார். 2 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இதுபற்றி கார்த்திகாவின் பெற்றோர் கண்டித்தபோது, கார்த்தி தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று கார்த்திகா கூறி வந்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்தியிடமும் கேட்டுவந்தார். எனவே பவானி சோமசுந்தரபுரம் வீதியில் ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்து 2 பேரும் தங்கி இருந்தனர். பெரும்பாலும் கார்த்திகா மட்டும் அங்கே இருந்தார். கார்த்தி அவ்வப்போது வந்து சென்றார். இந்தநிலையில் 6-9-2017 காலை 10 மணி அளவில் கார்த்திகா மற்றும் அவரது பெற்றோர் செல்போன் கடைக்கு சென்று கார்த்தியிடம் திருமணம் குறித்து பேசினார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்திகா கடுமையாக சத்தம் போட்டார்.

அதைத்தொர்டர்ந்து பெற்ேறார், ‘நீயே பேசி சமாதானம் அடைந்து திரும்பி வா’ என்று கூறி கார்த்திகாவை மட்டும் கடையில் விட்டு விட்டு புறப்பட்டு சென்றனர். அப்போது கார்த்திகா மட்டும் தனியாக இருந்ததால், கார்த்தி அவரை நைசாக கடையின் உள்ளே அழைத்தார். அங்கு கார்த்திகாவை கொலை செய்யும் நோக்கில், அவரைப்பிடித்து சுவரில் தள்ளி மோத வைத்தார். நிலை குலைந்த அவரது கழுத்தைப்பிடித்து கையால் இறுக்கி அவர் அணிந்திருந்த துப்பட்டாவைக்கொண்டேகழுத்தை நெரித்தும் கார்த்தி கொலை செய்தார்.

பின்னர் உடலை எங்காவது கொண்டு சென்று மறைக்கும் நோக்கத்தில் ஒரு சாக்குப்பையில் திணித்து வைத்தார். இரவில் உடலை எடுத்துச்சென்று ரகசியமாக எரித்துவிட திட்டமிட்டார்.

இதற்கிடையே கார்த்திகாவை நீண்டநேரமாக காணாததால் தந்தை சுப்பிரமணியும் மற்றவர்களும் கடைக்கு வந்தனர். அவர்களைப்பார்த்ததும் கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகா சாக்குப்பையில் திணிக்கப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய புகாரின்பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினார்கள். அவர்கள் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி என்கிற மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் பெண் குழந்தை மறுவாழ்வுக்காக தமிழக அரசு ரூ.2 லட்சமும், கார்த்தியிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத்தொகை ரூ.50 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் என்று நீதிபதி மாலதி அந்த உத்தரவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.