பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்


பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 14 Dec 2019 5:00 AM IST (Updated: 14 Dec 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை கூலித்தொழிலாளி உயிரோடு எரித்துக்கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாவூர்சத்திரம், 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அணைந்தபெருமாள் (வயது 55), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பன்னீர்செல்வம் (50) பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 35 ஆண்டுகள் ஆகிறது. கனகராஜ் (30), திருமலைச்செல்வன் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள். யாருடைய உதவியும் இல்லாமல் நகரக்கூட முடியாத நிலையில் உள்ளனர்.

அணைந்தபெருமாள் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனது மகன்கள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதற்கும், தனது குடும்ப க‌‌ஷ்டத்துக்கும் மனைவி பன்னீர்செல்வம்தான் செய்வினை வைத்துள்ளதாக கூறி அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அனைவரும் வீட்டில் தூங்கச்சென்றனர். அப்போது அணைந்தபெருமாள் வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து பன்னீர்செல்வத்தின் மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வம் அலறி துடித்தார். மேலும் அணைந்தபெருமாள் மீதும் தீப்பற்றியது.

அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக தீயை அணைத்து இருவரையும் படுகாயங்களுடன் மீட்டனர். 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் 2 பேரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பன்னீர்செல்வம் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். அணைந்தபெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவரே உயிரோடு எரித்துக் கொன்ற பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய் இறந்ததை கேள்விப்பட்டதும் மகன்கள் இருவரும் கதறி அழுதனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அணைந்தபெருமாளின் மகன்கள் இருவரும் யாரும் கவனிப்பாரின்றி அனாதையாக விடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை மீட்டு மாற்றுத்திறனாளிகள் விடுதியில் சேர்க்க உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story