திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில், பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில், பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 Dec 2019 3:45 AM IST (Updated: 14 Dec 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் மணிவாசகம். இவர், மதுரையில் பி.எஸ்.என்.எல். ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுதா. அரசு பள்ளி ஆசிரியை. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர்.

அதேபோல் அவர்களின் மகன், மகள் ஆகியோர் பள்ளிக்கு சென்று விட்டனர். இதற்கிடையே மாலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதில் இருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் அனைவரும் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் துணை வேந்தர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது. அதில் இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மேலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்தது எம்.வி.எம்.நகர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story