திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து 9 மாணவர்கள் படுகாயம்


திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து 9 மாணவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 15 Dec 2019 4:30 AM IST (Updated: 14 Dec 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திருச்சி மட்டுமின்றி, தஞ்சை மாவட்டம் மேகளத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை மேகளத்தூரில் இருந்து மாரனேரி, இந்தலூர், கிளியூர், பத்தாளப்பேட்டை வழியாக பள்ளிக்கு 15 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. திருவெறும்பூர் அருகே செட்டியார் பேட்டை பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் அந்த பஸ் திரும்பியது.

வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

அப்போது, எதிர்பாராத விதமாக பஸ் சாலையோரம் இருந்த விளாங்குளம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பஸ்சில் சிக்கி இருந்த மாணவ-மாணவிகளை மீட்டனர். இதில் 10-ம் வகுப்பு மாணவர்களான கிளியூரை சேர்ந்த ஆதிகேசவன், தொண்டைமான் பட்டியை சேர்ந்த யுவன்சங்கர், குணால், பத்தாளப்பேட்டையை சேர்ந்த ஆரோன், பிளஸ்-1 மாணவன் இலந்தூரை சேர்ந்த முரளி, பிளஸ்-2 மாணவன் மேகளத்தூரை சேர்ந்த செட்ரிக் மற்றும் மாணவர்கள் ஜோஸ், ஜோ, ஆண்டனி ஆகிய 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் 9 பேருக்கும் திருவெறும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் சென்றதால் பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

அப்போது, இந்த பகுதியில் சாலை குறுகலாக இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அத்துடன் இந்த வழியாக வரும் பள்ளி பஸ்கள் அதிவேகமாக செல்வதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள். பின்னர் பள்ளியில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு மீதமிருந்த மாணவ-மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி பஸ் டிரைவர் தினகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story