வெடிமருந்து குடோனை கைப்பற்ற வந்த தீவிரவாதிகள் காப்பாற்றுவது எப்படி என்ற போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு


வெடிமருந்து குடோனை கைப்பற்ற வந்த தீவிரவாதிகள் காப்பாற்றுவது எப்படி என்ற போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 7:09 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே வெடிமருந்து குடோனை கைப்பற்ற வந்த தீவிரவாதிகளிடம் இருந்து, அதனை காப்பாற்றுவது எப்படி என போலீசார் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான வெடி மருந்து குடோன் உள்ளது. இந்த நிலையில் வெடிமருந்து குடோனை நோக்கி 10 தீவிரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்தனர்.

இதனால் பொதுமக்கள் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நடைபெற போகிறது என சிதறி ஓடினார்கள். இதற்கிடையில் பாதுகாப்பு படையினர், கமோண்டோ படையினர் விரைந்து வந்து அந்த தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒத்திகை நிகழ்ச்சி

அதன்பின்னர் தான் தெரிந்தது அது ஒத்திகை நிகழ்ச்சி என்று. இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து தீவிரவாதிகளை சுட்டு பிடிப்பதும், மற்றவர்களை உயிருடன் பிடிப்பது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி வெடிமருந்து குடோனை சுற்றியுள்ள முந்திரி காட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தத்ரூபமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துைண சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலும், ஆயுதபடை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன், ஓ.என்.ஜி.சி. பாதுகாப்பு படை முதுநிலை அதிகாரிகள் மகேஷ் குமார், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் ஓ.என்.ஜி.சி. வெடிமருந்து குடோன் பாதுகாப்பாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், மலைச்சாமி, தமிழரசி, சந்திரகலா, சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார்கள், ஊர்காவல்படையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story