கரூரில் கடையில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


கரூரில் கடையில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

கரூர் நகரில் கடையில் நடந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

கரூர்,

கரூர் பஞ்சமாதேவி அரசுகாலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 51). இவர், கரூர் திண்ணப்பா கார்னர் மேற்கு பிரதட்சணம் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் போட்டோ பிரேம் ஒர்க்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று காலை ராஜமாணிக்கத்தின் மகன் தளபதி கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் கடையை பூட்டி விட்டு காப்பீடு திட்டத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக விவரம் கேட்க கலெக்டர் அலுவவலகத்திற்கு குடும்பத்தினருடன் தளபதி சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் அங்கு வந்து பார்த்தபோது, ராஜமாணிக்கத்தினர் கடையில் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த நாற்காலிகள், கண்ணாடி பிரேம்கள், போட்டோ பிரேமுக்கான பட்டிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உட னடியாக அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்பு கருதி தங்களது வீட்டிலிருந்து வெளியேறினார்கள். இந்த தீ விபத்து குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு எரிந்து கொண்டிருந்த பொருட்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். போக்கு வரத்திற்கு பிரதான சாலையாக திண்ணப்பா கார்னர் இருப்பதால், அங்கு போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் கரூர் மனோகரா கார்னர், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் கரூர் டவுன் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை திருப்பி விட்டனர்.

அமைச்சர் நேரில் ஆறுதல்

இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜமாணிக்கம், அவரது மனைவி சுந்தரி, மகன் தளபதி மற்றும் மகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கடை எரிவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி துடித்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அங்கு வந்து பார்வையிட்டார். பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட்டதா? தீ விபத்தில் யாரும் சிக்கி காயம் அடைந்தனரா? என்பது குறித்து கேட்டறிந்து அருகிலுள்ள இடங்களுக்கு தீ பரவவிடாமல் தடுக்குமாறு தீயணைப்புத்துறையினரிடம் கேட்டு கொண்டார். மேலும் ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.

ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் எனவும், மின்சார வயர்கள் ஒன்றோடொன்று பட்டு மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story