உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம்
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில குழு அமைப்பு நிலை நெறிப்படுத்துதல் மாநாடு உழந்தை கீரப்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மகாலில் நடந்தது. இதன் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கலந்து கொண்டு கட்சியின் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான அஜிஸ் பாஷா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் செயலாளர் ஏகாம்பரம், தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்சியின் மாநில செயலாளர் சலீம் மாநாட்டு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநாட்டில் தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் தேவைக்கு அதிகமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 8,500 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அனைவருக்கும் தரமான சுகாதார வசதி கிடைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டம்ஒழுங்கை பாதுகாக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story