மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மீது தாக்குதல் - கண்டனம் தெரிவித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மீது தாக்குதல் - கண்டனம் தெரிவித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:42 PM GMT (Updated: 14 Dec 2019 10:42 PM GMT)

பிரசவ வார்டில் செருப்பு அணிந்து வரக்கூடாது என்று கூறிய பயிற்சி பெண் டாக்டரை 2 பெண்கள் தாக்கியதை கண்டித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை,

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். அவருடைய மனைவி முனீஸ்வேல்மணி. நேற்று அதிகாலையில் அவர் பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரின் சகோதரி ராஜராஜேஸ்வரி, மாமியார் முருகேசுவரி ஆகியோர் பிரசவ வார்டுக்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், அவர்களை தடுத்து நிறுத்தி வார்டுக்குள் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 பெண்களும், டாக்டரிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த பெண் டாக்டர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவர் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அங்கு உள்ள கூட்டஅரங்கம் முன்பு கூடினார்கள். டாக்டரை தாக்கப்பட்டதையும், அதில் தொடர்புடைய பெண்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜராஜேஸ்வரியை கைது செய்தார்கள். முருகேசுவரியை தேடிவந்தனர்.


இந்த நிலையில் பிரசவ வார்டில், அந்த பெண் டாக்டர் தன்னை தாக்கியதாக முருகேசுவரியும் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவங்களால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story