பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டம்


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 8:13 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2019-20-ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவத்திற்கு கொதிகலனை இளஞ்சூடேற்றும் விழா கடந்த மாதம் நடந்தது. அதனை தொடர்ந்து சர்க்கரை ஆலையில் அரவைப்பருவம் தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கலந்து கொண்டு சர்க்கரை ஆலையின் அரவை எந்திரத்திற்குள் கரும்பினை செலுத்தி நடப்பாண்டிற்கான அரவைப்பருவத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது;-

அபிவிருத்தி பணிகள்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2019-20-ம் ஆண்டிற்கான அரவை பருவத்திற்கு 6 ஆயிரத்து 239.55 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தேசமாக நடப்பு அரவைப் பருவத்திற்கு பதிவு செய்த சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் டன் கரும்பு பரிமாற்றத்தின் அடிப்படையில், மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டம், கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசனம் அமைத்தல், அதிக சர்க்கரை கட்டுமானம் மற்றும் அதிக மகசூல் தரவல்ல ரகங்களை அபிவிருத்தி செய்து பயிரிட செய்தல் உள்ளிட்ட கரும்பு அபிவிருத்தி பணிகள் தற்போது 2019-20-ம் ஆண்டு நடவுப் பருவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த அரவைப் பருவம் சிறப்புடன் நடைபெற கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சர்க்கரை ஆலையின் நிர்வாக அலுவலர் குமாரராஜா, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, துணை தலைமை பொறியாளர் மணிவண்ணன், துணை தலைமை வேதியியலாளர் மாதவன், தலைமை கரும்பு அலுவலர் வேணுகோபால் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகிகள், பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், எறையூர் சர்க்கரை ஆலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story