பாதாள சாக்கடை திட்டம் வந்தும் பலனில்லை: ஈரோடு வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
பாதாள சாக்கடைதிட்டம் வந்தும் பலனில்லாமல் ஈரோடு வீதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றும் பணிகள் சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. இணைப்பு கொடுத்த நாள் முதல் வீடுகளில் இருந்து கழிவு முழுமையாக பாதாள சாக்கடை திட்ட குழாய்களுக்குள் விடப்பட்டது.
இப்படி விடும்போது அந்த குழாய் அடைப்புகள் இல்லாமல் இருக்கிறதா?, கழிவுநீர் தடையின்றி செல்ல தொடர் குழாய்கள் போடப்பட்டு இருக்கின்றனவா? என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது சுமார் 50 சதவீதம் அளவுக்கு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு, அந்த வீடுகள், தொழில் நிறுவனங்களில் இருந்து கழிவுகள் பாதாள சாக்கடை திட்ட குழாய்களுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால், பல இடங்களில் சாக்கடை குழாய் இணைப்பு தொட்டிகள் நிரம்பி, கழிவு சாலையில் வெளியேறி வருகிறது.
மேட்டூர் ரோடு, சென்னிமலை ரோடு, வீரபத்திரா வீதி, பூந்துறை ரோடு என்று பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட தொட்டிகளில் இருந்து கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது. மழை பெய்தால் அனைத்து பகுதிகளில் இருந்தும் கழிவு நீர் ஊற்றுபோல பெருக்கெடுத்து செல்கிறது. மேட்டூர் ரோட்டில் பாதாள சாக்கடை தொட்டி மூடியையும் தாண்டி கழிவுகள் வெளியேறி இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுபற்றி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தாலும், தொழிலாளர்கள் இல்லாததால் வேலை செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வார்டுக்கு குறைந்த பட்சம் 4 பணியாளர்களாவது வேண்டும்.
ஆனால் இதுநாள் வரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. தனியார் ஒப்பந்ததாரர்களை வைத்து அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒப்பந்ததாரர்களும் அடிக்கடி மாறி விடுவதால் எந்த பணியையும் முறையாக செய்ய முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் விடப்படும் கழிவு சுத்திகரிப்பு தொட்டிகளுக்கு செல்வதற்கு என்ற இணைப்புப்பாதையும் இல்லாமல் குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டதால் கழிவுகள் முழுமையாக குழாய்களில் சேர்ந்து தாழ்வான பகுதி வழியாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இருக்கும் பகுதியில் வெளியேறும் கழிவு நீரை சாலையோர மழைநீர் வடிகாலில் செல்லும்படி குழாய் அமைத்து இருக்கிறார்கள். பாதாள சாக்கடை திட்டத்துக்கு முழுமையான பணிகள் நிறைவடையாத பகுதிகளில் இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ‘செப்டிக் டேங்க்’ அப்படியே இருக்கிறது.
பணிகள் முழுமையாக முடியும்வரை முன்பு இருந்ததுபோன்று கழிவுகள் ‘செப்டிக் டேங்க்’ செல்லும் வகையில் மாற்றம் செய்தால் கூட சாலைகளில் கழிவுகள் பாய்ந்து துர்நாற்றம் வீசும் நிலையை தடுக்க முடியும்.
அல்லது மாநகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பாதிப்பு இல்லாத செயல்பாட்டை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்பது ஈரோடு மாநகர மக்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story