துறையூரில் பரிதாபம் தெப்பக்குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி தொழிலாளி பலி


துறையூரில் பரிதாபம் தெப்பக்குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Dec 2019 10:15 PM GMT (Updated: 15 Dec 2019 8:24 PM GMT)

துறையூரில் உள் தெப்பக்குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 1 மணிநேரம் போராடி அவருடைய உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் சிவன்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இங்குள்ள பெரிய ஏரி நிரம்பியதால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர்் நிரம்பி இருக்கிறது.

இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தெப்பக்குளத்தில் மீன் பிடித்து வருகிறார்கள். பலர் தெப்பக்குளத்தில் குளித்து வருகிறார்கள். இந்த தெப்பக்குளத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி உயிர்பலிகள் ஏற்பட்டு வருகிறது.

கூலித்தொழிலாளி பலி

இந்த நிலையில் துறையூர் செக்கடி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பையா(வயது 48) நேற்று தெப்பக்குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை தேடினார்கள். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு அவருடைய உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துறையூர் போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story