தக்கலை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு மேலும் ஒரு வீட்டில் திருட முயற்சி


தக்கலை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு மேலும் ஒரு வீட்டில் திருட முயற்சி
x
தினத்தந்தி 15 Dec 2019 10:15 PM GMT (Updated: 15 Dec 2019 8:46 PM GMT)

தக்கலை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் மேலும் ஒரு வீட்டிலும் திருட முயன்றுள்ளனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி தேரிக்கடையை சேர்ந்தவர் ராபி (வயது 55). இவருடைய மகள் அஜிதா (27) திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அஜிதா, கணவருடன் தாய் வீட்டுக்கு வந்தார்.

அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி் கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், அஜிதா கையில் அணிந்திருந்த 2 பவுன் தங்க வளையலை பறித்தார். கையை யாரோ இழுப்பது போல் இருந்ததால், அஜிதா விழித்து பார்த்து விட்டு, திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். அவர்கள் நகையை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் ஓடி விட்டார்.

இதைத் தொடா்ந்து சம்பவம் பற்றி தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அனாதையாக நின்ற மோட்டார் சைக்கிள்கள்

அப்போது அஜிதாவின் வீட்டு முன் 2 மோட்டார் சைக்கிள்கள் அனாதையாக நின்றன. அவற்றை நகை பறிக்க வந்தவர்கள் கொண்டு வந்ததும், அதில் ஒரு மோட்டார் சைக்கிள் அதே பகுதியை ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அது கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காணாமல் போனது என்றும் தெரிய வந்தது.

இதற்கிடையே மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்த ஏஞ்சல் வெளியே ஓடியது. பின்னர் அருகே உள்ள ஒருவரின் வீட்டின் முன் சென்று நின்றது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “அஜிதாவிடம் தங்க வளையல் பறித்த மர்ம நபா்கள் அதே பகுதியில் வசித்து வரும் வசந்தி (35) என்பவரது வீட்டிலும் திருட முயன்றுள்ளனர். வீட்டுக்குள் புகுந்ததை வசந்தி பார்த்து விட்டதால் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்”் என்றனர்.

Next Story