குடியுரிமை சட்டம் வீர சாவர்க்கரின் கொள்கைக்கு எதிரானது - பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே பதில்


குடியுரிமை சட்டம் வீர சாவர்க்கரின் கொள்கைக்கு எதிரானது - பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே பதில்
x
தினத்தந்தி 16 Dec 2019 5:00 AM IST (Updated: 16 Dec 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்டம் வீர சாவர்க்கரின் கொள்கைகளுக்கு எதிரானது என பாரதீய ஜனதாவுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில் அளித்து உள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா, நாக்பூரில் இன்று தொடங்கும் மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப முடிவு செய்து உள்ளது.

மேலும் இந்த பிரச்சினையில் உத்தவ் தாக்கரே தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

இந்தநிலையில், சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க நாக்பூர் சென்று உள்ள முதல்-மந்திரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வீர சாவர்க்கர் சிந்து நதி முதல் கன்னியாகுமரி வரையிலான நிலப்பரப்பை ஒரே நாட்டின் கீழ் கொண்டு வர விரும்பினார். அதைச் செய்வதற்குப் பதிலாக, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை இந்தியாவுக்குள் அனுமதிப்பதன் மூலம் வீர சாவர்க்ரை அவமதிக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தம் வீர சாவர்க்கரின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனவே குடியுரிமை சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா? இல்லையா? என்பதை அறிய காத்து இருக்கிறோம்.

இந்த சட்டம் குறித்த எங்கள் கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் நாங்கள் அந்த சட்டத்தை மராட்டியத்தில் அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம்.

நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. குடியுரிமை சட்டம் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டதா?

இந்த சட்டத்தின் மூலம் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story