வீர சாவர்க்கர் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்
வீர சாவர்க்கர் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் வலி யுறுத்தி உள்ளார்.
மும்பை,
ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது ‘ரேப் இன் இந்தியா'(இந்தியாவில் பாலியல் பலாத்காரம்) என்பது நாட்டின் நிலையாக உள்ளது என்று பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா பெண் எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பிய நிலையில், நேற்றுமுன்தினம் டெல்லியில் நடந்த காங் கிரஸ் பொதுக்கூட்டத்தில் இந்த பிரச்சினையை கையில் எடுத்து பேசிய ராகுல்காந்தி, ‘‘என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல. என் பெயர் ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், என்றார்.
வீர சாவர்க்கர் பற்றிய அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மராட்டியத்தில் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் ராகுல்காந்தியை சாடி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சுதந்திர போராட்ட இந்தியாவின் வரலாற்றை ராகுல்காந்தி படித்த மாதிரி தெரியவில்லை. வீர சாவர்க்கர் பற்றிய தனது கருத்துக்கு ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், என்றார்.
மேலும் இந்த பிரச்சினையில் சிவசேனா மீதும் குற்றம் சாட்டிய தேவேந்திர பட்னாவிஸ், மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவை மதிப்பதாக தெரிவித்து உள்ள சிவசேனா காங்கிரசுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது, என கூறினார்.
இது குறித்து, மும்பையில் பேட்டி அளித்த பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:-
புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை ராகுல்காந்தி அவமதித்து இருப்பது நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தியை ஒரு போதும் நாடு மன்னிக்காது. சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் 2 முறை பாடம் கற்பித்து விட்டனர். அவர்களால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியவில்லை. கடன் வாங்கிய குடும்ப பெயரை கொண்ட ராகுல்காந்திக்கும், வீர சாவர்க்கருக்கும் ஒரு மைக்ரான் ஒப்பீடு கூட செய்ய முடியாது.
வீர சாவர்க்கரை அவமதித்த காங்கிரசுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள உத்தவ் தாக்கரே விரும்புகிறாரா? என்பதை சிவசேனா விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story