தம்பதியிடம் நகை, பணம் மோசடி: கன்னட இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட 3 பேர் தலைமறைவு - கைது செய்ய போலீசார் தீவிரம்


தம்பதியிடம் நகை, பணம் மோசடி: கன்னட இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட 3 பேர் தலைமறைவு - கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 16 Dec 2019 5:27 AM IST (Updated: 16 Dec 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

மகனை வழக்கில் இருந்து விடுவிக்க தம்பதியிடம் நகை, பணம் வாங்கி மோசடி செய்த கன்னட இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு எச்.ஏ.எல். அருகே வசித்து வருபவர் சிக்கபீரய்யா. இவரது மனைவி கிரிஜா. இந்த தம்பதியின் மகனை வழக்கு ஒன்றில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதுபற்றி கன்னட திரைப்பட இயக்குனரும், சிக்கபீரய்யாவின் உறவினருமான பிரசாந்த் ராஜிக்கு தெரியவந்தது. உடனே அவர், சிக்கபீரய்யா, கிரிஜா தம்பதியை சந்தித்து, உங்கள் மகன் மீதுள்ள வழக்கில் இருந்து, அவனை விடுவிக்க தான் உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இதற்காக ரூ.20 லட்சம் செலவாகும் என்று தம்பதியிடம் பிரசாந்த் ராஜ் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ரூ.10 லட்சம் மற்றும் தங்க நகைகளை பிரசாந்த் ராஜிடம் தம்பதியினர் கொடுத்துள்ளனர். நகை, பணத்தை பெற்றுக் கொண்ட பிரசாந்த் ராஜ், சிக்கபீரய்யாவின் மகனை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

அத்துடன் மேலும் ரூ.15 லட்சம் கொடுக்கும்படி தம்பதியிடம் பிரசாந்த் ராஜ் கேட்டதாக தெரிகிறது. மறுபடியும் பணம் கொடுக்க மறுத்துவிட்ட சிக்கபீரய்யா, தான் ஏற்கனவே கொடுத்த ரூ.10 லட்சம், தங்க நகைகளை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இந்த நிலையில், நகை, பணத்தை திரும்ப கொடுக்க பிரசாந்த் ராஜ் மறுத்து விட்டார். மேலும் தனது சகோதரரும் தயாரிப்பாளருமான நவீன்ராஜ், உறவினர் நாகராஜ் ஆகியோருடன் சேர்ந்து சிக்கபீரய்யா, அவரது மனைவிக்கு பிரசாந்த் ராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் எச்.ஏ.எல். போலீசார், பிரசாந்த் ராஜ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட 3 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story